வணிகத்தின் "வாடிவாசல்"
உலகில் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் இருக்க ஒருவன் Business என அழைக்கப்படும் தொழில் அல்லது வணிகத்தை தன் வாழ்க்கையாக தேர்ந்தெடுக்க காரணம் என்னவாக இருக்கக்கூடும்?
யாருடைய கட்டளைக்கும் அடிபணியாத ஒரு சிங்கம் போல, ஒரு காட்டு ராஜாவைப் போல உலா வரும் கனவு தானே, பெரும்பான்மையோரை வணிகத்தை நோக்கி உந்தித் தள்ளுகிறது. ஆனால், ஒரு சிங்கம் பிறந்த உடனே ராஜாவாக பட்டாபிஷேகம் செய்யப்படுவதில்லை. . சிறு குட்டியாக பிறந்ததில் இருந்து ராஜாவாக பரிணமிக்கும் காலம் வரை அது சந்திக்கும் இடர்கள், யுத்தங்கள் ஏராளம். இந்த இடர்களில், யுத்தங்களில் உயிர் தப்பித் பிழைத்து, வெற்றிக் கொடி நாட்டினால் மட்டுமே அது காட்டு ராஜா.
வணிகமும் அப்படிதான். வெற்றி பெற்ற ராஜாக்கள் மட்டுமே வெளிச்சத்திற்கு வருவர். நீங்கள் வெற்றி பெரும்பட்சத்தில், உங்க்ள் வெற்றி மட்டுமே வெளிச்சமிடப்படும். அந்த வெற்றிக்கு நீங்கள் கொடுத்த விலை, நீங்கள் தொலைத்த தூக்கம், நீங்கள் சிந்திய வியர்வை, கண்ணில் வடிந்த கண்ணீர் வெளி உலகம் அறியாது.
இடர்கள் நிறைந்தது, பாதுகாப்பற்றது, வாழ்வா, சாவா போராட்டம் என நன்கு தெரிந்தும் இந்த சவால்களை சந்திக்க ஒரு பெரும் கூட்டம் களம் இறங்க காரணம் என்ன? அது வணிகம் தன்னுள் பொதிந்து வைத்துள்ள சிலிர்ப்பு (Thrill).
நல்லதொரு ஓவியம் போல, சிற்பம் போல, கவிதை போல, வணிகமும் ஒரு படைப்பு. புதியன புனைய, புதிய வானம், புதிய பூமி படைக்க ஒருவனுக்குள் இருக்கும் படைப்பாற்றல் மரபணுவே அவனை ஒரு தொழில் முனைவோனாக பெரும் நதிக்குள் நீச்சலிட தள்ளி விடுகிறது.
இந்த சிலிர்ப்பு ஒரு ஜல்லிக்கட்டு காளையை அடக்க களம் இறங்கும் ஒரு இளைஞனின் உள்ளுள் இருக்கும் சிலிர்ப்பு. ஜல்லிக்கட்டில் ஒரு காளையை அடக்க என்ன பரிசு கிடைத்து விடும்? அந்த பரிசு ஒருவனின் உயிருக்கு எந்த விதத்தில் இணையாகும்? ஆனாலும், உயிரை பணயம் வைத்து ஏன் களம் காண்கிறார்கள்? ஒரு பெரும் காளையை அடக்குவதில் அடங்கியிருக்கும் சிலிர்ப்பு என்பதை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?
வணிகமும் ஒரு ஜல்லிக்கட்டு காளை போல தான். அத்தனை எளிதில் வசப்பட்டு விடுவதில்லை. வாடிவாசல் வழியே அடுத்து வெளிவரும் காளைக்கு கண்கள் விரிய காத்திருக்கும் வேளையில், அந்த காளையை வசப்படுத்தும் சில குறிப்புகளை இந்த சிறு புத்தகம் முழுக்க பேச இருக்கிறோம். உண்மையில் இவை Clubhouse தளத்தில் பேசப்பட்டவை. இப்பொழுது எழுத்து வடிவம் பெறுகிறது. ஒரு கல்லூரி பாடப்புத்தகம் போல இல்லாமல், மேற்கத்திய தத்துவங்களையும், தரவுகளையும் அப்படியே பேசாமல், இயன்றவரை எளிய தமிழில், இந்த மண்ணின் மணத்தோடு தர முயற்சிக்கிறோம்.
வானம் வசப்படட்டும்

அன்புடன்
ராஜராஜன்
விஸ்வா
ஜெபா