மார்க்கெட்டிங் எனும் மந்திர சாவி
வணிகம் ஒரு பூங்கதவு எனில், அதை தாழ் திறக்கும் மந்திர சாவி சந்தையிடல் (Marketing) என சொல்லலாம். ஆடையில்லா மனிதன் அரை மனிதன் என்று தமிழில் ஒரு முதுமொழி உண்டு. வணிக மொழியில் சொன்னால், மார்க்கெட்டிங் தெரியாத வணிகன் அரை வணிகன் எனலாம். ஒரு மாணவன் படிப்பில் சிறந்து விளங்குகிறான். மருத்துவராக முடிவு செய்கிறான். பல்வேறு படிநிலைகள் தாண்டி பல ஆண்டுகளுக்கு பின் மருத்துவ பட்டம் பெறுகிறான். ஆனால், எல்லா மருத்துவர்களும் வணிக ரீதியாக வெற்றி பெறுவதில்லையே ஏன் ? தன்னை, தன் மருத்துவத்தை, தன் மருத்துவமனையை சந்தையிட தெரிந்தவர்கள் வணிக ரீதியில் ஜெயிக்கிறார்கள். எனில், வெற்றி பெறாதவர்கள் திறமையற்றவர்களா?
புரிந்து கொள்ள வேண்டியது இது தான். நீங்கள் நடத்தும் தொழிலில் உங்களுக்கு இருக்கும் திறமை மட்டும் உங்களை வணிக வெற்றியாளராக உயர்த்தாது. உங்கள் திறமையோடு கூட துல்லியமான மார்க்கெட்டிங் உத்தியும் கைகோர்க்கும் போது உங்கள் தொழில் வெற்றி அடைகிறது. நீங்கள் வெற்றியாளராக மாறுகிறீர்கள்.
சந்தையிடல் என்பது வணிகத்தின் ஒரு பகுதியல்ல. அது தான் வணிகம். மார்க் கியூபன் எனும் அமெரிக்க தொழிலதிபரின் வார்த்தையில் சொன்னால் “No sales, No Company”. `எந்த தொழிலுக்கும் ஆதாரமானது மார்க்கெட்டிங்கும், புதுமையான சிந்தனைகளும்’ என்கிறார் ‘பீட்டர் ட்ரக்கர்’, எனும் நிர்வாக மேதை.

மார்க்கெட்டிங்கை பலர் உபயோகிக்க மறுப்பதற்கு காரணம் அதை பற்றிய அறியாமை தான். .மார்க்கெட்டிங் என்றால் செலவு’ என்று மட்டுமே நினைக்கிறார்கள். மார்க்கெட்டிங் என்பது செலவு அல்ல, முதலீடு.மேலும், மார்க்கெட்டிங் ஒரு காப்பீடு. உங்கள் பிராண்டை போட்டியாளர் தாக்காத வண்ணம் நீங்கள் உருவாக்கும் எக்கு கோட்டை.
சமீபத்தில் தூத்துக்குடியில் இருந்து வந்த ஒரு வணிகரிடம் பேசிக் கொண்டிருந்தேன். இதுவரை, திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா மாதிரி ஆர்ப்பாட்டம் இல்லாமல் வியாபாரம் செய்து கொண்டிருந்தவர். டி -மார்ட் எனும் பெரு நிறுவனம் தூத்துக்குடியில் கால் பதிக்க ஆடிப்போய் இருக்கிறார். எனவே தான் சொல்கிறேன் உங்கள் தொழிலின் உயிர் மூச்சு மார்க்கெட்டிங். தழைக்க மட்டுமல்ல, பிழைத்துக் கிடைக்கவும் .
மார்க்கெட்டிங் எனும் ஒற்றைச் சொல் ஒரு செயல்பாட்டை குறிப்பதல்ல. அது பல்வேறு செயல்பாடுகளின் கூட்டு செயல்பாடு. நம்மில், பலர் மார்க்கெட்டிங் என்பதை விளம்பரம் செய்வது என்று எண்ணுகின்றனர். விளம்பரம் மார்கெட்டிங்கில் ஒரு பகுதி, அது மட்டுமே மார்க்கெட்டிங் அல்ல. எனில், எவையெல்லாம் மார்க்கெட்டிங் செயல்பாடுகள்? இந்த கேள்வியோடு ஒரு பெருங்கடலின் கரையில் கால் நனைக்க முன் நகர்வோம்.