நீலக்கடல் வியூகம் (Blue Ocean Strategy)
W.Chan Kim மற்றும் Renée Mauborgne ஆகிய இருவரால் 2004 ஆம் ஆண்டு எழுதி வெளியிடப்பட்ட வணிக புத்தகம் இது. இதுவரை 43 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு 35 லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகி உள்ள புத்தகம். கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் ஆய்வு செய்து, நூறாண்டுகளின் வணிக தரவுகளை ஆய்வுக்குள்ளாகி உருவாக்கப்பட்ட கோட்பாடு இது.
போட்டியற்ற சந்தை இடத்தை உருவாக்குவதும், போட்டிகளை இல்லாதாக்குவதுமே (How to create uncontested Market Space and Make the Competition irrelevant) இந்த கோட்பாடு முன்னிறுத்தும் தாரக மந்திரம். கடல் என்றாலே நீல நிறம் தான். ஆனால், ஆங்காங்கே சிகப்பு திட்டுகள் கடலில் காணப்படுகின்றன. இது, எல்லையை தக்க வைத்துக் கொள்ள பெரிய திமிங்கலங்களிடையே நடக்கும் யுத்தத்தின் காரணமாக வெளியேறும் ரத்தத்தின் விளைவு. இந்த ரத்தக் களரியில் நீல நிற கடல் செந்நிற கடலாக (Red ocean) மாறி விடுகிறது. மாபெரும் கடலில் ஏன் ஒரு சிறு இடத்திற்கு மோதிக் கொள்ள வேண்டும்? யாருமற்ற வேறு இடத்தில் சாம்ராஜ்யத்தை கட்டமைக்கலாமே என்கிற சிந்தனையின் உருவகமே இந்த நீலக்கடல் (Blue Ocean).
போட்டி நிறைந்த வணிக உலகில், போட்டியை வெல்ல இருக்கும் ஒரே வழி போட்டிப் போடாமல் இருப்பது தான். சுருங்கி வரும் சந்தையில், மாறி வரும் தொழில் நுட்பத்தில் , புதிய புதிய பொருட்கள் களம் காணும் சூழலில், போட்டிகள் பெருகினால் நடப்பது விலை குறைப்பும், லாப இழப்பும் மட்டுமே. இதை தவிர்க்க, நம் கண் முன் இப்பொழுது இருக்கும் சந்தை பரப்பையும், (Market Space) அதில் உள்ள போட்டியாளர்களையும் மனதில் கொள்ளாமல், வருங்காலம் உருவாக்க இருக்கும் புதிய சந்தை பரப்பை மனதில் கொண்டு போட்டியற்ற ஒரு புதிய சந்தையை வென்றெடுக்க இந்த புத்தகம் பரிந்துரைக்கிறது.
அப்படி வட்டங்களையும், கட்டங்களையும் உடைத்தெறிந்து புதிய பாய்ச்சலோடு புறப்படும் கனவுகளை வெறும் உணர்வுப் பூர்வமாக அணுகாமல், அறிவியல் ரீதியாக படிப்படியாக கட்டமைக்க இந்த புத்தகம் கற்றுத் தருகிறது.
ஏற்கனவே சந்தையில் இருப்பவர்களும், புதிதாக வணிகத்தில் நுழைபவர்களும் ஒருமுறையேனும் இந்த புத்தகத்தை வாசித்தால் இது நிச்சயம் அவர்கள் வணிகத்தில் புதிய பரிணாமங்களைக் காண செய்யும்.
புத்தகத்தின் சொல்லப்பட்டுள்ள கோட்பாடுகளை உள்வாங்கி, அவற்றை இன்றைய கால சூழலுக்கு ஏற்ப, நம் மண்ணிற்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டால், வானமே நம் எல்லையாகும்.