ஊதா பசு (Purple Cow)
சேத் காடின் என்பவர் 2003 இல் எழுதி பிரபலமான வணிக புத்தகம் இது. பேசும் பொருளாகி உங்கள் வணிகத்தை மறு உருவாக்கம் செய்யுங்கள் (Transform Your Business by Being Remarkable) என்கிற முழக்க வாக்கியத்தோடு (Tag Line) இதன் முகப்பு அட்டை இருக்கிறது. சந்தையில் நிறைய பொருட்கள், நிறைய விளம்பரங்கள் வந்து விட்ட காரணத்தால், விளம்பரங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் சக்தியை இழந்து வருகின்றன என்பது இவரது வாதம். ஆகவே, சராசரி பொருட்களை உருவாக்குவதற்கு பதிலாக, குறிப்பிடத்தகுந்த பொருட்களை (Remarkable Products) உருவாக்கி அதை வாய் வழியே (Word of Mouth) வாடிக்கையாளர்களை சென்றடைய செய்ய வேண்டும் என்பதே அவரது கொள்கை.
உங்கள் தயாரிப்பு எல்லோராலும் பேசப்பட வேண்டும் என்பதற்கு அவர் முன்னிறுத்தும் உருவகமே “ஊதா பசு”. ஒரு கூட்டம் பசுக்களிடையே வித்தியாசமான நிறத்தில் இருக்கும் பசு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் என்பது இதன் அர்த்தம். இன்னும் ஆழமாக சொன்னால், உங்கள் விளம்பரம் மட்டும் சிறப்பாக இருந்தால் போதாது, நீங்கள் தயாரிக்கும் பொருளே வித்தியாசப்பட வேண்டும் என்பது தான்.
இவர் வாடிக்கையாளர்களை ஐந்து விதமாக பிரிக்கிறார். புதுமை விரும்பிகள் (Innovators), விரைந்து தகவமைப்பவர்கள் (Early Adopters), முந்தைய பெரும்பான் மை (Early Majority), பிந்திய பெரும்பான் மை (Late Majority) பின் தங்கியவர்கள் (Laggers). எந்த பொருள் சந்தையில் வந்தாலும் அதை உடனடியாக வாங்கி பயன்படுத்துபவர்களே Innovators. இதை தொடக்கப்புள்ளியாக கொண்டு இவரது ஐந்தடுக்கு படிநிலை அமைக்கப்படுகிறது.
அவர் சொல்லும் அடுத்த கட்டம் சுவாரஸ்யமானது. இந்த சிறந்த பொருளை வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்க்க ஒரு ஐடியா வைரஸ் (Idea Virus) உருவாக்கப்பட வேண்டும் என்கிறார். ஒரு வைரஸ் போல, இன்னும் புரியும்படி சொன்னால் கொரோனா வைரஸ் போல விரைந்து பரவும் யுக்தி ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதையே அவர் ஐடியா வைரஸ் என்கிறார்.
மூன்றாவது, தும்முகிறவர்களை (Sneezers) கண்டு பிடித்து அவர்களிடம் இந்த வைரஸை விதைக்க வேண்டும். Innovators, Early adopters மனநிலை கொண்டவர்களே இந்த தும்முகிறவர்களாக இருப்பதால் முதலில் அவர்களிடம் பொருளை கொண்டு சேர்க்க வேண்டும். அவர்களின் வாய்வழி செய்தி மூலம் (Word of Mouth) அது பெரும்பான்மையோரை சென்றடையும் என்பது தான் “ஊதா பசு” முன்னிறுத்தும் வெற்றிச் சூத்திரம்.
இதை குறித்து விரிவாக தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் இணையம் மூலம் வாங்கியோ, பதிவிறக்கம் செய்தோ வாசித்துப் பாருங்கள். ஒரு வேளை , உங்களாலும் ஒரு ஊதா பசுவை உருவாக்க இயலும்.